

சென்னை: சென்னை புளியந்தோப்பு, நரசிம்ம புரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் (49). இவர் மீது 7 கொலை வழக்கு உள்பட 40 குற்றவழக்குகள் இருந்தது. எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேலூர் மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்தார். வழக்கு விசாரணைக்காக மட்டும் சென்னைக்கு அவ்வப்போது வந்து சென்றார்.
அதன்படி, கடந்த ஆக. 18ம் தேதிவழக்கு விசாரணைக்காக எழும்பூர்நீதிமன்றத்துக்கு வந்தார். பின்னர், மாலையில் உணவருந்த பட்டினப்பாக்கம் கடற்கரை சென்றார். அப்போது, அவரை காரில் தொடர்ந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
இந்த கொலை தொடர்பாக அதிமுக பிரமுகர்கள் ஜோகன் கென்னடி, சுதாகர் பிரசாத் ஆகிய 2 பேர், நெல்லையைச் சேர்ந்த ரவுடிகள் உள்பட மொத்தம் 11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அதிமுக பிரமுகர்கள் உள்பட 8 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.