

கோவை: சவாரி புக்கிங் செய்வது போல மொபைல் ஆப் மூலம் செயல்படும் டாக்ஸி நிறுவன ஓட்டுநர்களிடம் நூதன முறையில் நிதி மோசடி செய்யும் சம்பவங்களால் ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒருபுறம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகளவில் பல்வேறு துறைகள் மிகச் சிறப்பான வளர்ச்சி பெற்றுவரும் நிலையில், மறுபுறம் அதே தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி தினந்தோறும் பல்வேறு வழிகளில் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடும் ஆசாமிகளால் மக்கள் பலர் நிதி இழப்பை சந்திக்கும் அவலங்களும் தொடர்கின்றன.
கோவையில் மொபைல் செயலி மூலம் செயல்படும் பல்வேறு தனியார் டாக்ஸி நிறுவனங்களில் பணியாற்றும் ஓட்டுநர்களை குறி வைத்து புதுமையான நிதி மோசடி சம்பவங்கள் நடப்பதாக ஊழியர்கள் தெரிவித்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்ஸி ஓட்டுநர்கள் கூறியதாவது: முதலில் போனில் தொடர்புகொள்ளும் நபர் வாடிக்கையாளர் போல பேசி தனக்கு டாக்ஸி வேண்டும் என கூறுகிறார். உதாரணத்துக்கு சத்தி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்ல வேண்டும் என்கிறார்.
ஓட்டுநர் அந்த பகுதிக்கு சென்று டாக்ஸி புக் செய்தவரிடம் போனில் தொடர்பு கொண்டால், தனக்கு அல்ல என்றும் வாகனம் தன்னுடைய மனைவிக்கு தேவைப்படுவதாகவும், பொருட்கள் வாங்கிய பின் வந்துவிடுவார். சிறிது நேரம் காத்திருங்கள் என தெரிவிக்கின்றனர்.
சில நிமிடங்களில் மீண்டும் ஓட்டுநரை தொடர்புகொண்டு தன்னுடைய மனைவிக்கு ‘ஜி பே’ மூலம் பணம் செலுத்த முடியவில்லை. தங்கள் மொபைல் எண்ணுக்கு ரூ.3,500 அனுப்பியுள்ளேன். உடனடியாக உங்கள் போனில் இருந்து என் மனைவியின் மொபைல்போனுக்கு ‘ஜி பே’ செய்து விடவும் என கூறி மொபைல் போன் நம்பரை கொடுக்கின்றனர். அந்நபர் கூறிய தொகை வந்துள்ளதாக எஸ்எம்எஸ் வருகிறது.
மீண்டும் அந்நபர் அழைத்து முதலில் ரூ.500 செலுத்தவும் என கூறுகிறார். அவசரத்தில் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனிக்காமல் சில ஓட்டுநர்கள் உடனடியாக ரூ.500 அனுப்புகின்றனர். அடுத்து மீண்டும் ரூ.1,000 அனுப்ப அறிவுறுத்தப்படுகிறது.
அடுத்தமுறை ரூ.2,000 அனுப்ப கூறும்போது பணம் இல்லாமல் பரிவர்த்தனை தடைபடுகிறது. உடனடியாக ஓட்டுநர் தனது வங்கி கணக்கில் பணத்தை சரிபார்க்கும் போது அதிலிருந்த மொத்த இருப்பு தொகை ரூ.1,500 காணாமல் போயிருப்பதும், எஸ்எம்எஸ் வந்தது போல ரூ.3,500 தனது வங்கி கணக்கில் வரவில்லை என்பதும் தெரிகிறது.
உடனடியாக சம்பந்தப்பட்ட எண்களை தொடர்பு கொண்டால் ‘சுவிட்ச் ஆப்’ அல்லது தொடர்பு கொள்ளமுடியாது என பதில் வருகிறது. பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் பலர் அடுத்தடுத்து சவாரி செல்ல வேண்டியுள்ளதால் இந்த மோசடி குறித்து காவல்துறை அலுவலகத்துக்கு நேரம் ஒதுக்கி சென்று புகார் அளிக்க ஆர்வம் காட்டுவதில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் கூறும்போது, ‘‘சைபர் கிரைம் குற்றச்செயல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வு மிகவும் அவசியம். நூதன முறைகளில் மேற்கொள்ளப்படும் மோசடிகளை நம் செயல்பாடுகளால் எளிதில் முறியடிக்க முடியும். எஸ்எம்எஸ்-ஐ மட்டும் நம்பாமல் வங்கி கணக்கில் பணம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். அலட்சியம் காட்ட வேண்டாம். இதுபோன்ற மோசடி சம்பவங்களில் பாதிக்கப்படுவோர் சைபர் கிரைம் போலீஸாரிடம் நேரிலும் அல்லது 1930 என்ற எண்ணிலும், www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார் அளிக்கலாம்” என்றனர்.
முடங்கிய ‘ஜி பே’-வை: செயல்படுத்துவதாக நூதன மோசடிடாக்ஸி ஓட்டுநர்கள் கூறும்போது, ‘ஜி பே’ உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் செயலி சிலருக்கு சரியாக வேலை செய்வதில்லை. இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சில எண்களை தொடர்பு கொள்ளும்போது உதவுவதாக கூறி அவர்களும் நிதி மோசடி செய்கின்றனர்.
எங்கள் நண்பர் ஒருவர் இதே போன்று ரூ.4,000 இழந்துள்ளார். வங்கி அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொண்டால் வங்கி மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள செயலியை பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர்” என்றனர்.