

சென்னை: கோட்டூர்புரத்தில் உள்ள தேவாலயத்தில் காணிக்கை பணம் ரூ.10 லட்சம் திருடப்பட்டுள்ளது. கள்ளச் சாவியை பயன்படுத்தி கைவரிசை காட்டியவர்களை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சென்னை கோட்டூர்புரம், சர்தார் பட்டேல் சாலை பகுதியில் ‘ஹவுஸ் ஆப் பிரேயர்’ என்ற பெயரில் ஜெப வீடு தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தின் நிர்வாகியாக பென்சன் ஜெயராஜ் (73) என்பவர் உள்ளார். இவர், கடந்த 1-ம் தேதி இரவு ஜெப ஆராதனை முடிந்து காணிக்கை பணம் ரூ.10 லட்சத்தை அலுவலகத்தில் உள்ள பீரோவில் வைத்து பூட்டினார். பின்னர்,ஊழியர்கள் உட்பட அனைவரும்சென்றுவிட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் 9 மணிக்கு ஆலயத்துக்கு வந்த நிர்வாகிகள் கதவை திறக்க முயன்ற போது கதவு ஏற்கெனவே திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் திறந்து இருந்ததுடன் அதில்வைத்திருந்த ரூ.10 லட்சம் காணிக்கை பணமும் திருடுபோனது தெரியவந்தது.
இது தொடர்பாக தேவாலய நிர்வாகி ஜெயராஜ் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினர். கதவு மற்றும் பீரோவை கள்ளச் சாவியை பயன்படுத்தி திறந்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஜெபவீடு பற்றி நன்கு அறிந்த நபர்கள்தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கும் போலீஸார் வந்துள்ளனர்.
இதை அடிப்படையாக வைத்துவிசாரணை நடக்கிறது. மேலும், சம்பவ இடத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி அதன் மூலமும் துப்புதுலக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ ஜெபவீடு ஆலயத்தில் 10 லட்சம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.