Published : 04 Oct 2023 06:17 AM
Last Updated : 04 Oct 2023 06:17 AM
சென்னை: குடிபோதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட நபரை பீர்பாட்டிலால் தலையில் தாக்கி கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி (23). கடந்த 2021 ஜன.9 அன்று தங்கமணி, தனது நண்பர் முத்துவுடன் சேர்ந்து ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு, அரண்மனைக்காரத் தெரு சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் தங்கமணியை பீர்பாட்டிலால் தலையில் தாக்கி விட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த தங்கமணி, ஜன.14 அன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
முன் விரோதம்: இதுதொடர்பாக எஸ்பிளனேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துகொடுங்கையூரைச் சேர்ந்த பாலாஜி (23) மற்றும் அவருடைய நண்பர்களான அண்ணாநகர் நாத்(22), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஏலிய்யா (22) ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் பாலாஜி அவ்வப்போது குடிபோதையில் தகராறு செய்து வந்ததை தங்கமணி தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் தங்கமணியை மூவரும் சேர்ந்து கொலை செய் தது தெரியவந்தது.
இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்பாகநடந்தது. அப்போது போலீஸார் தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோவிந்த ராஜன் ஆஜராகி வாதிட்டார்.
அதையடுத்து, இளைஞர்கள் 3 பேர் மீதான குற்றச்சாட்டு அரசு தரப்பில் சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளதாகக்கூறி மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT