

புதுடெல்லி: பெண் உதவி ஆய்வாளரை கொலை செய்துவிட்டு, உயிரோடு இருப்பதாக நம்ப வைத்த தலைமைக் காவலர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
டெல்லியை சேர்ந்தவர் மோனா (27). கடந்த 2014-ம் ஆண்டில் அவர் டெல்லி காவல் துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். அப்போது தலைமைக் காவலர் சுரேந்திர சிங் ராணாவுடன் (42), அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. சுமார் 7 ஆண்டுகள் இருவரும் கட்டுப்பாட்டு அறையில் ஒன்றாக பணியாற்றினர். கடந்த 2021-ல் உத்தர பிரதேச காவல் துறையில் உதவி ஆய்வாளராக மோனா பதவியேற்றார். அதோடு குடிமைப் பணி தேர்விலும் கவனம் செலுத்தி வந்தார்.
உத்தர பிரதேசத்துக்கு மாறிய பிறகு இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. ராணாவுக்கு ஏற்கெனவே திருமண மான நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மோனாவிடம் வலியுறுத்தினார். இதை அவர் ஏற்கவில்லை. கடந்த 2021 செப்டம்பர் 8-ம் தேதி டெல்லி புகாரி புஸ்தா பகுதியில் இருவரும் சந்தித்தனர். திருமண விவகாரம் தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராணா, மோனாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவரது சடலத்தை அங்குள்ள ஓடையில் வீசி, உடல் தெரியாத வகையில் கற்களால் மூடினார்.
ராணாவின் நாடகங்கள்: மோனாவை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் டெல்லி முகர்ஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவருக்கு நெருக்கமான ராணாவிடம் போலீஸாரும் குடும்பத்தினரும் விசாரித்தனர். அப்போது அரவிந்த் என்பவரை மோனா காதலித்ததாகவும் இருவரும் ரகசிய இடத்தில் குடும்பம் நடத்த வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
இதை நம்பவைக்க தனது உறவினர் ராபினை, அரவிந்தாக நடிக்க ராணா ஏற்பாடு செய்தார். மோனாவின் குடும்பத்தினரை அரவிந்த் என்ற பெயரில் ராபின் செல்போனில் தொடர்பு கொண்டார். மனைவியுடன் குருகிராம் பகுதியில் வசித்து வருவதாக அவர் கூறினார்.
மோனா குடும்பத்தினருக்கு வந்த செல்போன் அழைப்புகள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது அவை போலி முகவரியில் பெறப்பட்ட சிம் கார்டுகள் என்பது தெரியவந்தது. இந்த போலி சிம் கார்டுகளை வழங்கிய ராவின் என்பவர் அண்மையில் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, சுரேந்திர சிங் ராணாவுக்கு சிம் கார்டுகளை வழங்கியதாக வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து டெல்லி முகர்ஜி நகர் போலீஸார், போதிய ஆதாரங்களுடன் ராணாவை கைது செய்தனர். அவருக்கு உதவியாக செயல்பட்ட ராபின், ராவினும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மோனாவின் அக்கா கூறியதாவது:
மோனா எனது இளைய தங்கை. அவர் திடீரென காணாமல் போய்விட்டார். அவரை கண்டுபிடித்து தரக்கோரி போலீஸ் அதிகாரிகளை சந்தித்துமனு அளித்தேன். எனது தீவிர முயற்சிக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு பலன் கிடைத்திருக்கிறது. ராணாவை நாங்கள் சந்தேகிக்கவில்லை. அவர் குடும்ப நண்பராக இருந்தார். எங்களோடு சேர்ந்து மோனாவை தேடினார். எனது தங்கையை கொலை செய்துவிட்டு உயிரோடு இருப்பதாக நம்பவைத்து ஏமாற்றி உள்ளார்.
இவ்வாறு மோனாவின் அக்கா தெரிவித்தார்.