

கோவை: கோவை மாவட்டத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட 200 மொபைல் போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உரிமையாளர்களிடம் மொபைல் போன்களை ஒப்படைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தற்போது வரை காணாமல் போன ரூ.2.50 கோடி மதிப்பிலான மொபைல் போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 34 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
349 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 469 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.70 லட்சம் மதிப்பிலான 660 கிலோ போதை பொருட்களும், ரூ.33 லட்சம் மதிப்பிலான போதை சாக்லேட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குட்கா வழக்கில் 433 பேர், மது விலக்கு வழக்கில் 5,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 355 பேர் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 1127 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 569 திருட்டு வழக்குகளில், 415 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.4.78 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 153 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
134 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 687 பள்ளிகளில் படிக்கும், 46,884 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை நடப்பாண்டில் 7,519 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8,543 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இன்று முதல் கோர்ட்டில் இ-பைல் எனப்படும் ஆன்லைன் மூலம் வழக்குகளுக்கு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வது நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.