

சென்னை: திருவொற்றியூர் கடற்கரையில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மணலி எட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் ஜோதீஸ்வரன் (22). இவர் மீது மணலி காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் குப்பத்தில் உள்ள இளையவாணன் என்ற நண்பரை பார்க்கச் சென்றுள்ளார். இருவரும் பட்டினத்தார் கோயில் தெரு அருகில் கடற்கரையில் அமர்ந்திருந்துள்ளனர்.
இரவு 10 மணி அளவில் அந்தப் பகுதிக்கு சென்ற திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த அபினேஷ் (20), சுனில் (22) ஆகியோரை ஜோதீஸ்வரன் கிண்டல் செய்து வம்பிழுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் அங்கிருந்து கோபத்துடன் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணி அளவில்ஜோதீஸ்வரன் மது போதையில் கடற்கரையில் படுத்து தூங்கியுள்ளார். அவரது நண்பர் இளையவாணன் தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், தங்களிடம் வம்பு இழுத்த ஜோதீஸ்வரன் கடற்கரையில் படுத்திருந்ததை அறிந்த அபினேஷ் மற்றும் சுனில் இருவரும் அரிவாளுடன் சென்று ஜோதீஸ்வரனை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான ஜோதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர். தகவல்அறிந்து திருவொற்றியூர் போலீஸார்நிகழ்விடம் விரைந்து ஜோதீஸ்வரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தலைமறைவான அபினேஷ், சுனில் ஆகிய இருவரையும் தகவல் கிடைத்த 2 மணி நேரத்தில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.