

சென்னை: ரூ.3,500 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதானநபருக்கு சென்னை சிபிஐ சிறப்புநீதிமன்றம் 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது.
சென்னை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள சிண்டிகேட் வங்கியில் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை நடந்து வருவதாக தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு, அந்த வங்கியின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி ஆர்.கே.அல்ரேஜா, மத்திய விஜிலென்ஸ் கமிஷனில் புகார் அளித்தார்.
அந்த புகாரின்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2014 பிப்.12 முதல் 2014 நவ.29 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு போலி நிறுவனங்கள் மூலம் நடப்பு கணக்கு தொடங்கி ரூ.3,500 கோடி வரை பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக முகமது பெரோஸ், ஹாரூன்ரஷீத், லியாகத் அலி ஆகியோருக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ஹாரூன் ரஷீத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6 லட்சம் அபராதம் விதித்து சிபிஐ நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்.16-ல் தீர்ப்பளித்தது. முகமது பெரோஸை வழக்கில் இருந்து விடுவித்தது.
இந்நிலையில், லியாகத் அலி மீதான வழக்கு சிபிஐ 12-வது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி டி.மலர்வாலண்டினா முன்பாக நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட லியாகத்அலிக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ. 3 லட்சம்அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.