

செங்கல்பட்டு: சோழன் விரைவு ரயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் வரை சோழன் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய பகுதிகளை கடந்து செல்கிறது. வழக்கம் போல நேற்று சோழன் விரைவு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்தடைந்து பயணிகள் ரயிலில் ஏறிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.
ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட எஸ்.1 கோச்சில் சந்தேகத்துக்கு இடமான முறையில் கழிப்பறையில் பைகளுடன் இருந்தஇருவரை விசாரித்தபோது, பையில் ஏராளமான தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் போலீஸார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
இதையடுத்து நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த அமித் பி ஜெயின் (44) மற்றும் ராம்லால் (44) என்பதும், அவர்கள் ரயிலில் தங்கத்தை எடுத்து சென்று நகை கடைகளுக்கு வியாபாரம் செய்ய உள்ளது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் வணிகவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன் மதிப்பு ரூ. 1கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.