

சிவகங்கை: சிவகங்கையில் கடையை சேதப்படுத்தியதை தட்டிக் கேட்ட காவலரை இளைஞர்கள் வாளை காட்டி விரட்டினர். அவர் பெட்ரோல் பங்க்குக்குள் நுழைந்ததால் உயிர் தப்பினார்.
சிவகங்கை பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் நேற்று முன்தினம் இரவு இருவர் வாளை காட்டி மிரட்டி சிகரெட் கேட்டனர். அங்கிருந்தோர் அவர்களை விரட்டி விட்டனர். பின்னர் கடைக்காரர் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றார். சிறிது நேரத்தில் அந்த நபர்கள், மேலும் இருவருடன் சேர்ந்து மீண்டும் கடைக்கு வந்தனர்.
கடை மூடப்பட்டிருந்த நிலையில், அருகேயுள்ள பால் கடையில் தகராறு செய்து பாட்டில்களை உடைத்தனர். அப்போது அவ்வழியாக வந்த காவலர் ஒருவர், அவர்களை தட்டிக் கேட்டார். ஆனால் அந்த நபர்கள் வாளை காட்டி காவலரை விரட்டிச் சென்றனர். தப்பியோடிய காவலர் அருகேயுள்ள பெட்ரோல் பங்க்குக்குள் நுழைந்தார்.
இதையடுத்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஏற்கெனவே கடந்த மாதம் மதுரை சாலையில் அரசு பேருந்தை வழிமறித்து நடத்துநரிடம் வாளைகாட்டி பணப் பையை பறித்து சென்ற கும்பலை போலீஸார் இன்னும் கைது செய்யவில்லை. அதேபோல் மதுரை சாலையில் ஆடு வியாபாரியிடம் பணம், பைக்கை பறித்தது, மானாமதுரை சாலையில் இளைஞரிடம் பைக் பறித்தது,
பாகனேரி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகையை வழிப்பறி செய்தது என தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இது போன்ற தொடர் குற்றச்சம்பவங்களால் சிவகங்கை மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதை தடுக்க மாவட்ட எஸ்பி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.