Published : 29 Sep 2023 04:12 AM
Last Updated : 29 Sep 2023 04:12 AM
கடலூர்: வடலூர் அருகே வாலாஜா ஏரி பகுதியில், விஷம் கலந்த தானியங்களை வைத்து பறவை களை கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடலூர் அருகே உள்ள மேலக் கொளக்குடி பகுதியில் உள்ள வயல் வெளிகளில், குறுவை நெல் அறுவடைக்கு பின் வாத்துகள் மேய்ச்சலுக்கு கொண்டு வரப் பட்டு, மேய்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திராவைச் சேர்ந்த பழனி என்பவருக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட வாத்துகள் இப்பகுதி வயல்களில் மயங்கி விழுந்து இறந்தன.
இதேபோல சம்பங் கோழிகளும், அபூர்வ பறவைகளும் அதே இடத்தில் இறந்து கிடந்தன. இது குறிந்து வனத்துறை சார்பில் வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வாலாஜா ஏரி அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் கையில் வைத்திருந்த பையில், கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களில்குருணை மருந்து கலந்து வைத்திருந்தனர்.
3 பேரையும் போலீஸார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கருங்குழியை சேர்ந்த பிரபாகரன் (36), அருள்தாஸ் (56), மேலக் கொளக்குடி பொங்கல் மாறன் (57) என்பது தெரியவந்தது. இந்த 3 பேரும் வாலாஜா ஏரிகளுக்கு வரும் குருவி, கொக்கு, நாரை, நீர்க் கோழி போன்றவைகளை பிடிப்பதற்காக தானியங்களில் மருந்து கலந்து வைத்துள்ளனர்.
அதனை உண்ட 200-க்கும்மேற்பட்ட வாத்துகள் மற்றும் அப்பகுதியில உள்ள அபூர்வ பறவைகள் இறந்தது விசாரணையில் தெரியவந்தது. போலீஸார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT