

தஞ்சாவூர்: தஞ்சையில் செல்ஃபோனை சார்ஜ் செய்தபடியே பேசியதில் செல்போன் வெடித்து இளம்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே விசித்திரராஜபுரம், காளியம்மன்கோயிலைச் சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி கோகிலாம்பாள் (33). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. பிரபாகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து, கோகிலாம்பாள் மேலகபிஸ்தலத்தில் வாட்ச் மற்றும் செல்போன் பழுது பார்க்கும் கடையை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், கோகிலாம்பாள் மதியம் செல்போனை சார்ஜ் போட்டபடி, ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக செல்போன் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் அந்த இடத்திலேயே கோகிலாம்பாள் உயிரிழந்தார். இதனால் கடையிலுள்ள அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.
இது தொடர்பாக கோகிலாம்பாள் தந்தை மனோகரன், கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகாரளித்ததின் பேரில்,போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.