

மதுரை: மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் அஜித்குமார் (28). இவர் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீதான மேலும் 2 கொலை வழக்குகள் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்காக தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில் அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். சக கைதிகளும், சிறைக் காவலர்களும் அவரை மீட்டு மதுரை ரயில்வே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்குப் பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அஜித்குமார் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறை அதிகாரிகள் கூறுகையில், அஜித்குமார் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. இதில் ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். மற்ற 2 வழக்குகள் தொடர்பாக ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மன விரக்தியில் இருந்தார்.
நேற்று காலை அஜித்குமார் அறையிலிருந்த மற்ற 2 கைதிகள், சிறை வளாகத்தில் பணிக்குச் சென்றுவிட்டனர். அஜித்குமார் மட்டும் தனியாக அறையில் இருந்தார். அப்போது தற்கொலை செய்துள்ளார் என்று கூறினர்.