கரூர் | திமுக பெண் வார்டு உறுப்பினர் கொலை - போலீஸ் விசாரணை

கரூர் மாவட்டம் பாலமலை காட்டுப்பகுதியில் சடலம் கிடக்கும் இடத்தில் ஆய்வு செய்யும் எஸ்.பி.  சுந்தரவதனம், டிஎஸ்பி அண்ணாதுரை.
கரூர் மாவட்டம் பாலமலை காட்டுப்பகுதியில் சடலம் கிடக்கும் இடத்தில் ஆய்வு செய்யும் எஸ்.பி.  சுந்தரவதனம், டிஎஸ்பி அண்ணாதுரை.
Updated on
1 min read

கரூர்: ஈரோடு மாவட்ட திமுக பெண் பேரூராட்சி வார்டு உறுப்பினர் கரூரில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து க.பரமத்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் பவித்திரம் ஊராட்சி பாலமலையில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான காட்டு பகுதியில் பெண் சடலம் கிடப்பதாக க.பரமத்தி போலீஸாருக்கும், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கும் நேற்று (செப். 26ம் தேதி) மதியம் தகவல் கிடைத்தது.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது தலை மற்றும் வலது பக்க நெற்றியில் பலத்த ரத்த காயத்துடன் உயிரிழந்த நிலையில் தலை மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த எஸ்.பி. இ.சுந்தரவதனம், அரவக்குறிச்சி டிஎஸ்பி அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

க.பரமத்தி போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள சென்னசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட சோளக்காளிபாளையம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மனைவி ரூபா (42) என்பதும், அவர் சென்னசமுத்திரம் பேரூராட்சி திமுக 7வது வார்டு உறுப்பினர் என்பது தெரியவந்தது.

இவர் கரூர் - ஈரோடு சாலையில் காயத்ரி நகர் பகுதியில் ஒரு வீட்டு வேலைக்கு மாத சம்பளத்திற்கு வந்து செல்வதாக தெரியவந்தது. இவர் நேற்று வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டவர் நேற்று வேலைக்கு வரவில்லை என்றும் இரவு வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கொடுமுடி காவல் நிலையத்தில் ரூபாவை காணவில்லை என அவர் குடும்பத்தினர் நேற்று புகார் அளித்துள்ளனர். ரூபா எப்படி இப்பகுதிக்கு வந்தார். வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு சடலத்தை வீசி சென்றுள்ளனரா? அல்லது இங்கு கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in