திரைப்பட பாணியில் துணிகரம்: வயதான தம்பதியை கட்டிப்போட்டு 75 பவுன், ரூ.3.5 லட்சம் கொள்ளை: வில்லிவாக்கத்தில் முகமூடி கும்பல் அட்டூழியம்

திரைப்பட பாணியில் துணிகரம்: வயதான தம்பதியை கட்டிப்போட்டு 75 பவுன், ரூ.3.5 லட்சம் கொள்ளை: வில்லிவாக்கத்தில் முகமூடி கும்பல் அட்டூழியம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை தாக்கி கை, கால்களை கட்டி போட்டு 75 பவுன் நகை மற்றும் ரூ.3.50 லட்சம் பணத்தை சினிமா பாணியில் கொள்ளையடித்த சம்பவம் சென்னையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் 2-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சோழன் (66). இவரது மனைவி வனஜா (60). சோழன் சொந்தமாக கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர்.

5 பேர் கொண்ட கும்பல்: சோழன் தனது மனைவி வனஜா உடன் தனியாக வசிக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தம்பதியர் வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. கண் விழித்த சோழன், கதவைத் திறந்து பார்த்தபோது, 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் வெளியே கத்தி, இரும்புகம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர்.

அதிர்ச்சி அடைந்த சோழன் கத்தி கூச்சலிடுவதற்குள் சுதாரித்துக்கொண்ட கும்பல் சோழனை சரமாரியாக அடித்து உதைத்தது. பின்னர், கத்தி முனையில் மிரட்டி வீட்டுக்குள் தள்ளி கதவை உள் பக்கமாக பூட்டியது. கண் விழித்து சத்தம் போட முயன்ற வனஜாவின் கையை கும்பல் வெட்டியது. இதில்,ரத்த காயம் அடைந்த அவர் வலியால் துடித்தார்.

பின்னர் கணவன், மனைவி இருவரது வாயிலும் துணியால் அடைத்துவிட்டு கயிற்றால் கை, கால்களை கட்டி ஷோபாவில் போட்டு பீரோவில் இருந்த 75 பவுன் நகை, ரூ.3.50லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு சோழன் தன் மனைவி உதவியுடன் கையில் கட்டப்பட்டிருந்த கட்டை அவிழ்த்தார். பின்னர், மனைவி கட்டையும் அவிழ்த்தார்.

அதன் பின்னர் நடந்த சம்பவம்குறித்து அருகில் உள்ள வசிக்கும்தனது மகளிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர் வந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். வில்லிவாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கொளத்தூர் காவல் துணை ஆணையர் சக்திவேல் மற்றும் தடயவியல் நிபுணர்கள் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

தனிப்படை அமைப்பு: திரைப்பட பாணியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் குறித்து வில்லிவாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து தப்பிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அதிகாலையில் வீட்டில் தனியாகஇருந்த வயதான தம்பதியை கத்தியால் வெட்டிவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in