

ஆவடி: செங்குன்றம் அருகே ஆள்மாறாட்டம் செய்து, ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்தது தொடர்பாக முதியவர் ஒருவரை நேற்று முன்தினம் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள ஆட்டாந்தாங்கல், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (54). இவரது தந்தை நடராஜன் அனுபவத்தில், பாடியநல்லூர் கிராமத்தில் இருந்த 78 சென்ட் நிலத்தை, நடராஜன் இறப்புக்கு பிறகு, வெங்கடேசன் தன் அனுபவத்தில் வைத்திருந்தார்.
இந்நிலையில், வெங்கடேசனின் அனுபவத்தில் இருந்த வந்த 78 சென்ட் நிலத்தை கடந்த 2000-ம் ஆண்டு, சென்னை, திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த ராமைய்யா (73), ரகுபதி என்ற ஆள்மாறாட்ட நபர் மூலம் போலியாக பொது அதிகாரம் பெற்று அபகரித்துள்ளார். பிறகு, சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை ராமைய்யா 13 பேருக்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெங்கடேசன் ஆவடி காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், ஆவடி-மத்திய குற்றப்பிரிவின் நிலப் பிரச்சினை தீர்வு பிரிவு காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த ராமைய்யாவை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர்.