கோவை சிறையில் நடந்த மோதலில் 4 வார்டர்கள், 7 கைதிகள் காயம்

கோவை சிறையில் நடந்த மோதலில் 4 வார்டர்கள், 7 கைதிகள் காயம்
Updated on
1 min read

கோவை: கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள் மற்றும் வார்டர்கள் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் 4 வார்டர்கள், 7 கைதிகள் காயமடைந்தனர்.

கோவை சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை கைதிகள் பிரிவில், கோவை மற்றும் மதுரையைச் சேர்ந்த 7 கைதிகள் அடைக்கப் பட்டிருந்தனர். இவர்களது நடவடிக்கை சரியில்லாததால், 2 கைதிகளை வேறு அறைக்கு சிறை நிர்வாகத்தினர் மாற்றம் செய்தனர்.

இந்நிலையில், விசாரணை கைதிகள் அறையில் சிறை வார்டர்கள் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வார்டர்களுடன் 3 கைதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சத்தம் கேட்டு மேலும் சில வார்டர்கள், கைதிகள் அங்கு திரண்டனர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதையடுத்து, வார்டர்கள் லேசான தடியடி நடத்தி கைதிகளை கலைத்தனர். அப்போது, 7 கைதிகள் அங்கிருந்த மரங்களின் மீது ஏறி ‘சோதனை என்ற பெயரில் அடிக்கடி தொந்தரவு செய்தால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வோம்’ என மிரட்டல் விடுத்தனர். சிலர் தங்களது கைகளை பிளேடால் அறுத்தும் மிரட்டல் விடுத்தனர்.

தகவல் அறிந்த சிறைத் துறை டி.ஐ.ஜி சண்முக சுந்தரம், காவல் கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கைதிகளை சமாதானப்படுத்தியதையடுத்து, மரத்தில் இருந்து கீழே இறங்கினர். கைதிகள் தாக்கியதில் காயமடைந்த வார்டர்கள் மோகன்ராம், பாபு, விமல்ராஜ், ராகுல் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

காயமடைந்த கைதிகள் தினேஷ், உதயகுமார், அரவிந்த், ஹரிஹரன், அழகர்சாமி, அய்யனார், கிஷோர் குமார் ஆகிய 7 பேர் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in