

நத்தம்: நத்தம் அருகே அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்தபோது வெடி விபத்து நேரிட்டு 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கருத்தலக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராசு மகன் ராஜா (25), முருகன் மகன் கருப்பையா (32) ஆகியோர், தீபாவளிப் பண்டிகை, கோயில் திருவிழாக்கள் மற்றும்வீட்டு நிகழ்ச்சிகளுக்கு விற்பனைசெய்வதற்காக நத்தம் அருகேஉள்ள கோசுக்குறிச்சி மங்கம்மாசாலை பகுதியில் உள்ள மாந்தோப்பில் அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலைசரடு வெடி, பேப்பர் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த வெடிகள் திடீரென வெடித்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், நத்தம் வட்டாட்சியர் ராமையா ஆகியோர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், நத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தியதில், அனுமதியின்றி நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த வெடி தயாரிப்பில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.