வடபழனி முருகன் கோயில் உண்டியலில் குச்சியில் டேப் ஒட்டி பணம் திருடியவர் கைது
சென்னை: வடபழனி முருகன் கோயிலில், குச்சியில் டேப் ஒட்டி நூதன முறையில் உண்டியல் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வடபழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. தினந்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை இக்கோயிலுக்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உண்டியலில் காணிக்கை செலுத்துவது போல நீண்ட நேரம் உண்டியல் அருகே நின்று கொண்டிருந்தார்.
இதனால், சந்தேகம் அடைந்த கோயில் ஊழியர்கள் அருகில் சென்று பார்த்தபோது சம்பந்தப்பட்ட நபர்,சிறிய குச்சி ஒன்றில் டேப்(இன்சுலேசன் டேப்) ஒட்டிசினிமா பாணியில் நூதனமுறையில் உண்டியலில் இருந்து ரூபாய் நோட்டுகளை திருடிக் கொண்டிருந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்து வைத்துக் கொண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வடபழனி போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். கோயில் உண்டியலிலிருந்து பணத்தைத் திருடிய நபரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அவரிடம் விசாரித்தபோது பிடிபட்ட நபர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த செந்தில் குமார் (48) என்பதும், அவர்வடபழனியில் உள்ள தனியார்மருத்துவமனையில் வார்டுபாயாக பணி செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், அவர் இதேபோன்று 3 முறை ஏற்கெனவே திருடியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்த ஆயிரம்ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
