

கோவை: கோவையில் தொடர் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். மேலும், மூவரை தேடி வருகின்றனர்.
கோவை ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி, காட்டூர் பகுதியில் கடந்த வாரம் ஒரே நாளில் 3 பெண்களிடம் அடுத்தடுத்து நகைகள் பறிக்கப் பட்டன. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க, உதவி ஆணையர் கணேஷ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மலாங் யாசர் ஜாப்ரி (23), பிரத்மேஷ் (24), மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமீர் என்கிற சிக்கு (22), ஆந்திராவை சேர்ந்த உசேன் அலி ஷேக் (19) ஆகியோர் எனத் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை காவலர்கள் ஆந்திரா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு சென்று தேடுதலில் ஈடுபட்டனர்.
அதில், கோவையில் வந்து நகை பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் மீது பல்வேறு பகுதிகளில் ஏராளமான நகை பறிப்பு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் கோவை சரவணம்பட்டியில் நேற்று காலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கினார்.
உடனே காவலர்கள் அந்நபரை மீட்டு விசாரணை நடத்தியபோது, அவர் ஆந்திராவை சேர்ந்த உசேன் அலி ஷேக் என்பதும், பெண்களிடம் நகை பறித்த வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து, கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது தொடர்பாக துணை ஆணையர் சந்தீஷ் கூறும்போது, ‘‘மலாங் யாசர் ஜாப்ரி தலைமையில் நால்வரும் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியில் மட்டும் 25 நகை பறிப்பு வழக்குகள் உள்ளன. ரயிலில் கோவை வந்து 3 இருசக்கர வாகனங்களை திருடியுள்ளனர்.
அந்த வாகனங் களில் சென்று 3 பெண்களிடம் நகையை பறித்துவிட்டு 2 இருசக்கர வாகனங்களை மட்டும் விட்டு விட்டு, ஒன்றை மறைத்து வைத்து விட்டு சென்று விட்டனர். பின்னர், உசேன் அலி ஷேக் மீண்டும் கோவை வந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சரவணம் பட்டிக்கு சென்ற போது தான் விபத்தில் சிக்கியுள்ளார்.
மலாங் யாசர் ஜாப்ரியிடம் மற்ற 3 பேரும் சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர். ஓரிடத்தில் திருடிவிட்டு மற்ற மாநிலத்துக்கு சென்று விடுவார்கள். உசேன் அலி ஷேக் மட்டும் கோவை வந்து உள்ளாரா அல்லது 4 பேரும் சேர்ந்துதான் இருக்கிறார்களா என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம். விரைவில் தலைமறைவாக இருக்கும் 3 பேரையும் கைது செய்து விடுவோம்’’ என்றனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் சிக்கினர்: கோவையில் வெவ்வேறு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி, வழிப்பறியில் ஈடுபட்டதாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர். பீளமேட்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் (37), நேற்று முன்தினம் சங்கனூர் சாலையில் நடந்து சென்றபோது அவரை வழிமறித்த நால்வர், ராமச் சந்திரனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்றனர்.
ரத்தினபுரி போலீஸார் விசாரணை நடத்தி, வழிப்பறியில் ஈடுபட்டதாக கண்ணப்பன் நகரைச் சேர்ந்த சரவணக்குமார் (31), கார்த்திக் (30), ரஞ்சித் (26), கோபிநாத் (28) ஆகியோரை கைது செய்தனர். சுகுணாபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (30) என்பவர், வடகோவை பாலம் அருகே சென்றபோது, கத்தியை காட்டி பணம் பறித்ததாக, ரத்தினபுரியைச் சேர்ந்த விமல்குமார் (30), அஜித்குமார் (23) ஆகிய இருவரையும் சாயி பாபா காலனி போலீஸார் கைது செய்தனர்.
கவுண்டம்பாளையம் சிவாநகரைச் சேர்ந்த சேகர்(49) என்பவரிடம் பணம் பறித்ததாக ராகேஷ் (20) என்பவரை கவுண்டம்பாளையம் போலீஸார் கைது செய்தனர்.