

சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகம்பற்றி அவதூறாகப் பேசியதாக ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரபல இந்து ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் (76). சென்னை தி.நகர் ராஜம்பாள் தெருவில் வசித்து வருகிறார். இவர் கடந்த11-ம் தேதி தி.நகர் பாரதிய வித்யா பவனில் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். அப்போது,அவரது உரையில் அம்பேத்கர், திருவள்ளுவர் உள்ளிட்ட சிலரை அவமதிக்கும் வகையில்அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
மேலும், தலித் சமூகத்தைப் பற்றி இழிவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் சென்னைசூளையைச் சேர்ந்த செல்வம் என்பவர் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ஆர்.பி.வி.எஸ்.மணியன் வீட்டுக்கு நேற்று அதிகாலை சென்ற. சென்னை தி.நகர் சரக காவல் உதவி ஆணையர் பாரதி ராஜன்தலைமையிலான போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
ஆர்.பி.வி.எஸ். மணியன் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர், மணியனை போலீஸார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தினர். அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, மணியனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்தார். அதையடுத்து நீதிபதி, ``உங்கள் மீதான புகாருக்கு பதிலளிக்க விரும்புகிறீர்களா'' என்றார்.
செப்.27 வரை காவல்: அதற்கு மணியன், தான்பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது என்றும், தனக்கு சிறுநீர் தொற்றுமற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். அதையடுத்து அவரை வரும் செப்.27 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் மணியன் சார்பில் ஆஜரான பாஜக வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ், ``அவரது முதுமை மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதியளிக்க வேண்டும்'' என்றார். அதற்கு ``இது தொடர்பாக பின்னர் பரிசீலிக்கப்படும்'' என நீதிபதி தெரிவித்தார்.