கிணற்றில் பெண் எலும்புக்கூடு மீட்பு - வரிச்சியூர் அருகே இளைஞர் உட்பட 3 பேர் கைது

கிணற்றில் பெண் எலும்புக்கூடு மீட்பு - வரிச்சியூர் அருகே இளைஞர் உட்பட 3 பேர் கைது
Updated on
1 min read

மதுரை: வரிச்சியூர் அருகே கிணற்றுக்குள் பெண் உடல் மீட்பு சம்பவத்தில் 2-வது திருமணம் செய்த இளைஞர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் வரிச்சியூர் அருகே கிணற்றில் சில நாட்களுக்கு முன்பு ஆண், பெண் எலும்புக் கூடுகளை போலீஸார் மீட்டனர். விசாரணையில், 6 மாதங்களுக்கு முன் காணாமல் போன குன்னத்தூர் பகுதி பூவலிங்கம் (25) என தெரிந்தது. பெண் உடல் யார் என்பது குறித்து கருப்பாயூரணி காவல் ஆய்வாளர் மோகன் அடங்கிய தனிப்படையினர் விசாரித்தனர்.

இந்நிலையில், கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண் எலும்பு கூடு பற்றி அடையாளம் தெரிந்தது. அவர்,குன்னத்தூர் காலனி அலெக்ஸ் பாண்டியன் காதலித்து 2-வது திருமணம் செய்த ஐஸ்வர்யா (21) என தெரியவந்தது. இது தொடர்பாக அலெக்ஸ் பாண்டி (26), அவரது நண்பர்கள் கார்த்திக் பிரகாஷ் (19), ஆனந்த் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஏற்கெனவே திருமணமான அலெக்ஸ்பாண்டி தனக்கு தெரிந்த ஒரு பெண் மூலம் மதுரை முத்துப்பட்டி காப்பகம் ஒன்றில் இருந்த ஐஸ்வர்யாவை காதலித்து 2-வது திருமணம் செய்துள்ளார். அலெக்ஸ்பாண்டி வீட்டில் எதிர்ப்புக் கிளம்பியதால் ஐஸ் வர்யாவிடமிருந்து தொடர்பைத் துண்டித்தார்.

ஆனாலும், அவர் விடாமல் தொடர்ந்தால் ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றரை ஆண்டுக்கு முன்பு அனைஞ்சியூர் அருகே ஐஸ்வர்யாவை அடித்துக் கொன்று வரிச்சியூர் கிணற்றுக்குள் வீசியதாக அவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in