

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு அருகே ‘கூல் லிப்' எனும் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவது தொடர்பாக ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவ கவுரவ செயலாளர் ஆ.சங்கர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: தமிழ்நாட்டில் மாணவர்களிடையே போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் ‘கூல் லிப்' எனும் போதைப் பொருளை தற்போது மாணவர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
‘கூல் லிப்' போன்ற போதை பொருட்களை பயன்படுத்த தொடங்கும் போது வாயில் கொப்புளங்கள், புண்கள் ஏற்படும். தொடர்ந்து பயன்படுத்தினால் வாய் புற்றுநோய் ஏற்படும். அத்தோடு பல், உதடு, தாடை சார்ந்த தசைகள் இறுகிவிடும். இதனால் நாளடைவில் வாய் திறக்க முடியாமல் போகலாம். வாய், உணவு குழாயில் மட்டுமல்ல, நரம்பியல் சார்ந்த பாதிப்புகளும் ஏற்படும்.
இந்த கொடிய ஆபத்தில் இருந்து மாணவர் சமுதாயத்தை மீட்க வேண்டும். இந்த போதை பொருளை பயன்படுத்தும் மாணவர்களின் பற்களில் கறை ஏற்படும். எனவே, மாணவர்களின் பற்களில் கறைகள் உள்ளதா, அந்த கறை எப்படி வந்தது என்பதை பள்ளி ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதை தடை செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மருத்துவ கண்காணிப்பு குழு ஏற்படுத்தி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உளவியல் நிபுணர்கள் மூலம் மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.
மேலும் பள்ளிக்கு அருகே உள்ள கடைகளில் ‘கூல் லிப்' உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை ஆய்வு செய்து காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.