

சென்னை: மனைவியின் பிறந்த நாளுக்கு பரிசு அளிப்பதற்காக சக பெண் ஊழியரை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். கடந்த 2018-ம் ஆண்டு தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்த அஜித்குமார், தனது மனைவி மகாலட்சுமியின் பிறந்த நாள் அன்று அவருக்கு தங்க நகை ஒன்றை பரிசளிக்க திட்டமிட்டார். இதற்காக தன்னுடன் பணிபுரிந்த சக பெண் ஊழியரான வேல்விழியிடம் பணமும், நகையும் கேட்டுள்ளார்.
அதற்கு வேல்விழி மறுக்கவே, ஆத்திரத்தில் துப்பட்டாவால் வேல்விழியின் கழுத்தை நெரித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக் கொண்டார். பின்னர், வேல் விழியின் உடலை சாக்குப்பையில் வைத்து கோயம்பேடு தீயணைப்பு நிலையம் அருகே வீசி விட்டு சென்றுள்ளார்.
தனது மகளை காணவில்லை என திருக்கோவிலூரைச் சேர்ந்த வேல்விழியின் தந்தை ராஜேந்திரன், சூளைமேடு போலீஸில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, அஜித் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிக்குளம் மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்பாக நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பி.ஆரத்தி ஆஜராகி வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அஜித்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இதில் ரூ.14 ஆயிரத்தை வேல்விழியின் பெற்றோருக்கு வழங்கவும், தமிழக அரசிடமிருந்து கூடுதல் இழப்பீடு பெற்றுக்கொடுக்க சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.