

திருவள்ளூர்: புழல் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 9 மாதத்துக்கு முன்பு அடிதடி வழக்கில் புரசைவாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட இம்மானுவேல் என்பவர் இச்சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், அவர் சிறையின் வெளியே அமர்ந்திருந்த போது அங்கு ஏற்கெனவே விசாரணை சிறையில் இருந்த ஓட்டேரியை சேர்ந்த சூர்யா மற்றும் புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த நித்தின்குமார் ஆகியோர் வந்து திடீரென தகராறில் ஈடுபட்டனர். பின்னர் இது கைக்கலப்பாக மாறி கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்ட சிறைக் காவலர்கள் விரைந்து வந்து கைதிகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த தாக்குதலில் கைதிகளுக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கஞ்சா விற்பனை தொடர்பாக இம்மானுவேலுவிடம் மற்ற இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து புழல் போலீஸார் விசாரிக்கின்றனர்.