கோவை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு

கோவை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு
Updated on
1 min read

கோவை: கோவை கணபதி வஉசி நகரைச் சேர்ந்தவர் நிதீஷ்குமார் (22). இவர் மீது ரத்தினபுரி காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

காந்திபுரம் 9-வது வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (22). இவர் மீது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பெண் வன்கொடுமை வழக்கு, கஞ்சா விற்பனை வழக்கு ஆகியவை உள்ளன. நிதீஷ்குமார் மீதான வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ரஞ்சித்குமார் மீதான வழக்கு அதே வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நிதீஷ்குமார், ரஞ்சித்குமார் ஆகிய இருவரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர், இருசக்கர வாகனத்தில் நிதீஷ்குமார், ரஞ்சித்குமார், இவர்களது நண்பர் கார்த்தி ஆகியோர் காந்திபுரத்துக்கு புறப்பட்டனர்.

நஞ்சப்பா சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அவர்களை 6 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்தது. உஷாரான நிதீஷ்குமார் மற்றும் நண்பர்கள் வேகமாக ராம்நகர் சாலையில் திரும்பினர். அப்போது, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் விரட்டிச் சென்று பட்டாக் கத்தி மற்றும் அரிவாளால் மூவரையும் வெட்டிவிட்டு தப்பினர்.

இதில் நிதீஷ்குமார், ரஞ்சித்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். காட்டூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in