சென்னை | ரேசன் பொருட்களை கடத்தியதாக ஒரு மாதத்தில் 735 பேர் கைது: உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் தகவல்

சென்னை | ரேசன் பொருட்களை கடத்தியதாக ஒரு மாதத்தில் 735 பேர் கைது: உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் தகவல்
Updated on
1 min read

சென்னை: பொதுவிநியோக திட்ட அரிசி உள்ளிட்ட பொருட்களை கடத்தியதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் மூலம் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு விநியோகித்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள், குடிமைப் பொருள்குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து சென்று, அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல், பதுக்கலில் ஈடுபடுவோர், உடந்தையாக செயல்படுவோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த ஆக.1 முதல் 31-ம் தேதி வரை ஒரு மாதத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ.31.69 லட்சம் மதிப்புள்ள 3,552 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி, 203 எரிவாயு உருளைகள், 900 கிலோ கோதுமை, 1,235 கிலோ துவரம் பருப்பு, 15 லிட்டர் மண்ணெண்ணெய், 100 பாக்கெட் பாமாயில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 155 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குற்றச்செயலில் ஈடுபட்ட 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் 1800 599 5950 என்ற கட்டணம்இல்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in