

சென்னை: சென்னையில் ‘பைக் டாக்சி’ சேவை அமலில் இருக்கிறது. இந்த நிலையில் சென்னை சூளைமேட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ராயப்பேட்டையில் உள்ள தனது சகோதரரை பார்ப்பதற்கு ‘பைக் டாக்சியில் முன்பதிவு செய்து பயணித்தார்.
பைக்கை முகப்பேர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (24) என்ற இளைஞர் ஓட்டினார். இந்நிலையில் பைக்கில் செல்லும்போது கல்லூரி மாணவியிடம் ரமேஷ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் ரமேஷ் மீது ஆதாரப்பூர்வமாக புகார் அளிக்க முடிவு செய்தார். எனவே அவருடைய அத்துமீறலை செல்போனில் ரகசியமாக வீடியோ பதிவு செய்தார்.
இந்த நிலையில் ராயப்பேட்டை வந்தவுடன் தனது சகோதரரிடம் இந்த தகவலை தெரிவித்தார். உடனடியாக அவர், ரமேஷை பிடித்து வைத்துக்கொண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ராயப்பேட்டை உதவி ஆணையர் பாலமுருகன் உத்தரவுப்படி, ஆய்வாளர் கிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். ரமேஷை கைது செய்ததுடன் அவரது பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "ரமேஷின் சொந்த ஊர் மதுராந்தகம். இவர் முகப்பேர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பகலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். வேலை முடிந்தவுடன் ‘பைக் டாக்சி’ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்'' என்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.