

சென்னை: எழும்பூரில் ரவுடியும், மந்தைவெளியில் பெயின்டரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்றுஅடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொலை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை புழல், காவாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (24). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் இரவு எழும்பூர் மாண்டியத் சாலையில் உள்ள டீக்கடை முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் மீது அமர்ந்திருந்தார். அப்போதுஅங்கு, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கும்பல் சத்யாவை சுற்றிவளைத்தது.
அவர் தப்பி ஓட முயன்றார். ஆனால்,கும்பல் அவரை விரட்டிச் சென்று வெட்டி கொலை செய்தது. எப்போதும்ஆள் நடமாட்டத்துடன் இருக்கும் மாண்டியத் சாலையில் நடந்த இந்த துணிகர கொலை சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்த எழும்பூர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, சத்யாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படைபோலீஸார் சம்பவ இடத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ``2020-ம் ஆண்டுமாதவரம் நாய் ரமேஷ் என்ற ரவுடி பேசின் பாலம் அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சத்யாவின் பெயரும் அடிபட்டது. எனவே, இந்த முன் விரோதத்தால் மாதவரம் நாய் ரமேஷின் கூட்டாளிகள் சத்யாவை தீர்த்துக் கட்டினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றனர்.
மது போதையில் மோதல்: சென்னை மயிலாப்பூர் விசாலாட்சிதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெயின்டர் தினேஷ் (32). இவர், மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் அருகே உள்ள துலுக்கானத்தம்மன் கோயில் திருவிழா சாமி ஊர்வலத்தில் மது போதையில் ஆடியபடி சென்றார். அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெயின்டர் பார்த்திபனும் (28)குடிபோதையில் ஆட்டம் போட்டார்.
அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில்பார்த்திபன் தாக்கியதில் தினேஷ் கீழே சரிந்து விழுந்தார். சுய நினைவின்றி கிடந்த தினேஷை அவரது நண்பர் பாலாஜி 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். தினேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.