Published : 11 Sep 2023 08:54 AM
Last Updated : 11 Sep 2023 08:54 AM

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி ஹாங்காங் கும்பல் ரூ.12 லட்சம் மோசடி - சென்னையில் 2 பேர் கைது

இலியாஸ், தமிழ்செல்வம்

சென்னை: சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைஅளித்தார். அதில், பகுதிநேர வேலை செய்வதற்காக ஆன்லைனில் தன்னை வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்ட நபர்கள் பின்னர் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டனர்.

யூடியூப் வீடியோக்களுக்கு லைக் செய்தல், ஓட்டல்களுக்கு ரிவியூ எழுதுதல் போன்ற எளிமையான டாஸ்க்குகளை வழங்கினர். அவர்கள் வழங்கிய டாஸ்க்குகளை முடித்த உடன் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக கிடைத்தது. இந்த ஆசையால் ரூ.12 லட்சத்து 22 ஆயிரத்தை நான் முதலீடு செய்தேன். அதை அவர்கள் வழங்கிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தேன். அதற்கு இரட்டிப்பு பணமும் வரவில்லை, நான் முதலீடு செய்த பணமும் கிடைக்கவில்லை. அதன் பின்னரே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே, என்னிடம் பகுதி நேர வேலை என பணமோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும்’ என புகாரில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மோசடி பணம் ஹாங்காங்கில் இருப்பவர்களுக்கு சென்றிருப்பது தெரிந்தது. மேலும், மோசடி நபர்கள் சென்னை மணலியைச் சேர்ந்த முகமது இலியாஸ் (38) என்பவருக்கு ரூ.60 ஆயிரம் கொடுத்து அவரது பெயரில் வங்கிக் கணக்கை தொடங்கி, அந்த கணக்கை சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வம் (44) என்பவரிடம் கொடுக்க வைத்து அந்த வங்கிக் கணக்கில் அடையாறைச் சேர்ந்தஇளைஞர் உட்படபலரை பணம் போட வைத்து மோசடி செய்துள்ளனர்.

இதையடுத்து மோசடிக்கு உடந்தையாக இருந்த முகமது இலியாஸ், தமிழ்செல்வம் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஹாங்காங் கும்பலை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறுகையில், ``ஆன்லைன் பகுதி நேர வேலை தொடர்பான முதலீடு குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். ஆன்லைனில் www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்கலாம்'' என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x