Published : 10 Sep 2023 05:05 AM
Last Updated : 10 Sep 2023 05:05 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த முகமூடிக் கொள்ளையர்கள், வாளைக் காட்டி மிரட்டி நடத்துநரிடமிருந்த பணப்பையை பறித்துச் சென்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு சிவகங்கைக்கு அரசு நகர்ப்பேருந்து புறப்பட்டது. வீரவலசை விலக்கு அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்தை வழிமறித்தனர்.
பின்னர், முகமூடி அணிந்திருந்த அவர்கள் பேருந்தில்ஏறி, நடத்துநரான திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அதிகாரத்தைச் சேர்ந்த பெரியசாமியிடம் (45)வாளைக் காட்டி மிரட்டி, அவர்வைத்திருந்த பணப் பையைபறித்துக் கொண்டு தப்பினர். அந்தப் பையில் ரூ.1,000 பணமும், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பயணச் சீட்டுகளும் இருந்தன. பேருந்தில் 2 பயணிகள் மட்டுமே இருந்ததால், கொள்ளையர்களை அவர்களால் தடுக்க முடியவில்லை.
இதுகுறித்து நடத்துநர் பெரியசாமி கூறும்போது, "மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திடீரென பேருந்தை மறித்து ஏறினர். பின்னர் எனது பணப்பையை அறுத்து எடுத்தனர். தொடர்ந்து, வாளைக் காட்டி தகராறு செய்தனர். `பணப்பையை பறித்துவிட்டீர்கள், எங்களை விட்டு விடுங்கள்' என ஓட்டுநர் கெஞ்சியதால், அவர்கள் எங்களை விட்டுச் சென்றனர்" என்றார். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: சிவகங்கை அருகேயுள்ள வண்டவாசியைச் சேர்ந்த ஜெயபால்(60), உடையநாதபுரத்தில் ஆட்டுக் கிடை அமைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தனதுஊரிலிருந்து உடையநாதபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, கரும்பாவூர் அருகே இரு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 5 பேர் ஜெயபாலை மறித்து, வாளைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் அவரது மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதற்கிடையே, முகமூடிக் கொள்ளையர்களை கைது செய்ய வலியுறுத்தி, சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின்பேரில், டிஎஸ்பி சிபிசாய் சவுந்தர்யன் தலைமையில் தனிப்படை அமைத்து, கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT