Published : 10 Sep 2023 04:04 AM
Last Updated : 10 Sep 2023 04:04 AM

கோடநாடு வழக்கு குறித்து பொய்யான தகவல் கூறுவதாக தனபால் மீது சேலம் எஸ்பி அலுவலகத்தில் இளங்கோவன் புகார்

சேலம்: கோடநாடு வழக்கு குறித்து சிலரது தூண்டுதலின்பேரில், என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும் தனபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அதிமுக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், சேலம் எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோடநாடு வழக்கில், தனபால் தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார். தனது சகோதரர் கனகராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார் என விபத்து நடந்த இடத்தில் ஊடகங்களுக்கு தனபால் பேட்டி கொடுத்தார். மேலும், கோடநாடு சம்பவத்தில் கனகராஜூவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

அது குறித்து வீடியோ ஆதாரம் உள்ளது. இந்நிலையில், திமுக மற்றும் சிலரது தூண்டுதலின் பேரில், பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார். அவர் உதகை நீதிமன்றத்தில், தனக்கு மனநிலை சரியில்லை என்று கூறி, மருத்துவ ஆதாரங்களுடன் ஜாமீன் கோரினார். நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்கியது. சில நாட்களுக்கு முன்னர், தனபாலின் மனைவி, தனது கணவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

அவரால், தனக்கும், குடும்பத்துக்கும் பாதுகாப்பு இல்லை. உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போலீஸாரிடம் தெரிவித்தார். நில மோசடி வழக்கில் மேச்சேரி போலீஸாரால் கைது செய்யப்பட்ட தனபாலை, சேலம் அரசு மருத்துவ மனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி அவர் பேசுகிறார். சிலரது தூண்டுதலின்பேரில் என் மீது குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார். தனபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எம்எல்ஏக்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி, ராஜமுத்து, மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x