Published : 10 Sep 2023 04:00 AM
Last Updated : 10 Sep 2023 04:00 AM

மேடவாக்கம் நகை திருட்டு சம்பவத்தில் தம்பதியை வெட்டிய வடமாநில இளைஞர் கைது

மேடவாக்கம்: மேடவாக்கம் நகை திருட்டு சம்பவத்தில் தம்பதியை வெட்டிய வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேடவாக்கம் ஐஸ்வர்யா கார்டன் 4-வது தெருவை சேர்ந்தவர் அனு பிரியா. இவரது கணவர் அருள் (30) வெளி நாட்டுக்கு சென்றதால், பாதுகாப்புக்காக தந்தை செல்வ ராஜ், தாய் மகேஸ்வரி இருவரும் அனு பிரியா வீட்டுக்கு வந்து தங்கி உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி, நள்ளிரவில், வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து, உள்ளே வந்த மர்ம நபர், வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தபோது, சத்தம் கேட்டு வெளியே வந்த தாய் மகேஸ்வரியைக் கண்டதும், தன் கையில் வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி, மகேஸ்வரி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயற்சித்துள்ளார். மகேஸ்வரி கத்தி கூச்சலிட்டுள்ளார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த மகேஸ்வரியின் கணவர் செல்வராஜ், மர்ம நபரைப் பிடிக்க முயற்சித்த போது, தன்னிடமிருந்த கத்தியால் செல்வராஜின் தலை, கழுத்து, முதுகு பகுதியில் குத்தியுள்ளார். தடுக்க வந்த மகேஸ்வரியும் கத்தியால் குத்தப்பட்டார். பெற்றோரின் அலறல் கேட்டு வெளியே வந்த மகள் அனு பிரியா, கூச்சலிட்டபடியே, அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.

இதையடுத்து பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், செல்வராஜ், மகேஸ்வரி இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, வீட்டில் மாட்டப்பட்டிருந்த சிசிடிவி காட்சிப் படி, விசாரணையை தொடங்கினர். அப்போது, இச்சம்பவத்தில் ஈடுபட்டது, வடமாநில இளைஞர் என தெரியவந்தது.

தொடர் விசாரணையில், குற்றவாளி ரயில் மூலமாக, பிஹார் மாநிலத்துக்கு செல்வது தெரியவர, பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் ஆல்பின் ராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் பரம சிவம், முதல் நிலை காவலர் செல்வகுமார், முகிலன் ஆகியோர் விமானம் மூலம் பிஹார் சென்று, ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

அப்போது, ரயிலில் இருந்து இறங்கிய மர்ம நபரை, அங்கேயே மடக்கிப் பிடித்து, பள்ளிக்கரணை காவல் நிலையம் அழைத்து வந்து, விசாரித்த போது, அந்த நபர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த மணிதேவ் சவுத்ரி (26) என, தெரிய வந்தது.

விசாரணையில் சென்னையில் பல ஆண்டுகளாக கட்டிட வேலை செய்து வந்த நிலையில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த வீட்டை நோட்டமிட்டு திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட மணி தேவ், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x