காஞ்சிபுரம் | தாயின் முகநூல் நட்பு மூலம் விபரீதம்; மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

காஞ்சிபுரம் | தாயின் முகநூல் நட்பு மூலம் விபரீதம்; மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது
Updated on
1 min read

காஞ்சிபுரம்: முகநூல் நட்பு மூலம் தாயிக்கு அறிமுகம் ஆன ஒருவர் அவரது 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையதள நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதுடன் தனிப்பட்ட தகவல்களை அவர்களிடம் கொடுப்பது, பழகுவது ஆபத்தில் முடியும் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (40). இவருக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கணவரை இழந்த இளம்பெண் ஒருவரின் நட்பு முகநூல் மூலம் கிடைத்துள்ளது. அந்தப் பெண் கணவரை இழந்து மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்ததால் தினேஷ்குமார் ஆதரவாக இருப்பார் என்ற நம்பிக்கையில் பழகியுள்ளார்.

நாளடைவில் காஞ்சிபுரம் வந்து அந்த பெண்ணுடனே தங்கி, இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அந்தப் பெண்ணின் குழந்தைகளும் அவரை அப்பா என்றே அழைத்து வந்தனர். இந்நிலையில் அந்தப் பெண் வேலை விஷயமாக வெளியூர் செல்லும் நேரத்தில் பள்ளியில் இருக்கும் அவரது 15 வயது மகளை ஏதாவது காரணம் சொல்லி வீட்டுக்கு அழைத்து வந்து தினேஷ்குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தினேஷ்குமார் தந்தையின் நிலையில் இருந்ததால் இவர் வந்து கூப்பிடும்போது பள்ளியில் இருந்தும் அவருடன் அனுப்பியுள்ளனர். இதுபோல் அடிக்கடி பாலியல் துன்புறுத்தல் செய்ததால் பொறுமையிழந்த மாணவி தனது தாயிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் தினேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முகநூலால் கிடைத்த நட்பு தாயின் வாழ்க்கையை சீரழித்ததுடன், அவரது மகளையும் பாதித்துள்ளது. முகநூல் மூலம் பழகுபவர்களின் நடத்தை குறித்து எதுவும் தெரியாத நிலையில், அவர்களிடம் தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிர்வது ஆபத்தானது என்றும் குறிப்பாக பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in