

சென்னை: பிறப்பில் சந்தேகப்பட்டு மகனை கொடுமைப்படுத்திய தந்தைக்கு மகளிர் நீதிமன்றம் விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையை 3 ஆண்டாக குறைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த என்.பன்னீர்செல்வமும், லூர்து மேரி என்பவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களது மூத்த மகன் பன்னீர்செல்வத்தைவிட நிறமாக இருந்ததால் அவரை பன்னீர்செல்வம் கழிப்பறையில் அடைத்து வைத்தும், சிகரெட்டால் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர் அளித்த புகாரின்பேரில் அந்த சிறுவன் மீட்கப்பட்டார். இந்நிலையில் தன்னையும் அடித்து கொடுமைப்படுத்துவதாக லூர்து மேரி அளித்த புகாரின்பேரில் கோடம்பாக்கம் போலீஸார் பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கில் பன்னீர்செல்வத்துக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன், குற்றம் சாட்டப்பட்ட பன்னீர்செல்வம் தற்போது மனம் திருந்தி இடைக்கால ஜாமீன் பெற்று வழக்கறிஞர் கிளார்க்காக இலவச சட்ட உதவிகளை செய்து வருவதால், அவருக்கான தண்டனையை 3 ஆண்டாக குறைத்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் அந்த சிறுவனை மீட்க புகார் அளித்த பக்கத்து வீட்டுக்காரருக்கும், துரித நடவடிக்கை மேற்கொண்ட கோடம்பாக்கம் போலீஸாருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.