

நாக்பூர்: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவோரை ஈர்க்கும் வகையில் செல்போன் செயலிகள் உருவாக்கப்படுகின்றன.
உலகம் முழுவதும் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின்போது சூதாட்டமும் நடைபெறுவது வழக்கம். சூதாட்டத்தைத் தடுக்க போலீஸார் திறமையாக செயல்பட்டாலும் நாட்டில் ஆங்காங்கே சூதாட்டம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தற்போது செல்போன் செயலிகள் மூலமாகவும் ஆன்-லைனில் சூதாட்டம் பரவலாக நடைபெற்று வருகிறது. இதனிடையே செல்போன் செயலிகளை பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவோரை ஈர்க்க பல்வேறு உத்திகளை கிரிக்கெட் சூதாட்டத் தரகர்கள் எனப்படும் கிரிக்கெட் புக்கிகள் செய்து வருகின்றனர்.
அதாவது புக்கிகள் அதிக அளவில் பணம் ஈட்டுவதற்காக, செல்போன் செயலிகளை பயன்படுத்துவோர் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபடும் வகையில் அவர்களுக்கு தொடக்கத்தில் குறைந்த அளவிலான பணப் பரிசுகள் கிடைக்க வழிவகை செய்கின்றனர். அதற்கு தகுந்தாற்போல் செல்போன் செயலிகள் மூலம் அவர்களுக்கு பணப் பரிசு கிடைக்கும்.
சாஃப்ட்வேர் நிபுணர்கள் அதற்கேற்ப செல்போன் செயலிகளை டிசைன் செய்கின்றனர். விளையாட்டில் ஈடுபடுவோருக்கு அவ்வப்போது சிறிய அளவிலான பணப் பரிசுகள் கிடைத்துக் கொண்டே இருக்க, அவர்கள் தொடர்ந்து விளையாடுவார்கள். இதன்மூலம் கிரிக்கெட் புக்கிகளுக்கு அதிக பணம் கிடைக்கும். செல்போன் செயலிகள் பயன்படுத்துவோருக்கு இழப்புதான் ஏற்படும்.
அதற்கேற்ப செல்போன் செயலிகளை உருவாக்குமாறு சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு கிரிக்கெட் புக்கிகள் அழைப்பு விடுக்கின்றனர்.
இதுகுறித்து நாக்பூரைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிரிக்கெட் புக்கிகள் அதிக லாபம் அடைவதற்காக செல்போன் செயலிகள் உருவாக்கப்படுகின்றன. இதற்காக சாஃப்ட்வேர் நிறுவனங்கள் அதிக அளவில் கட்டணத்தை பெறுகின்றன. ஆன்-லைன் சூதாட்டத்தின்போது செல்போன் செயலிகளை பயன்படுத்தி விளையாடுவோர் குறைந்த அளவில் பணப் பரிசுகள் பெற்றாலும், புக்கிகள்தான் அதிக லாபம் அடைவர். நாள்தோறும் அந்த செல்போன் செயலிகளின் புதிய வெர்ஷன்களை அவர்கள் வெளியிட்டு வருகின்றனர். கிரிக்கெட் புக்கிகளுக்காக தற்காலிக லிங்க்குகள், யூசர் ஐடி-கள், பாஸ்வேர்ட்களை அவர்கள் உருவாக்கித் தருகின்றனர்.
சில சாஃப்ட்வேர் நிறுவனங்களுடன் லாபத்தை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் ஒப்பந்தங்களை கிரிக்கெட் புக்கிகள் செய்துள்ளனர். இதுபோன்ற புக்கிகள் துபாய் போன்ற வெளிநாட்டு நகரங்களிலும் அலுவலகங்கள், சொத்துகளை வைத்துள்ளனர்.
நாக்பூரைச் சேர்ந்த அனந்த் ஜெயின் என்கிற சோன்டு ஜெயின் என்கிற சோன்டு கோன்டியா என்ற கிரிக்கெட் புக்கி இதுபோன்று 18 செல்போன் செயலிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதை போலீஸார் கண்டறிந்தனர். அவரைக் கண்காணித்ததில் சோன்டு, துபாயில் வசித்து வருவதாகத் தெரிகிறது.
நாக்பூரிலுள்ள கோன்டியா வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி ரூ.17 கோடியை பறிமுதல் செய்தனர். சோன்டுவின் சகோதரர், மனைவி, சகோதரி, மைத்துனர்கள், அவர்களது மனைவிகள் மீது நடவடிக்கை எடுக் முயற்சித்து வருகிறோம். அவர்களது பெயரில் சொத்துகள் வாங்கப் பட்டுள்ளதையும் கண்டறிந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.