

சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் சதித்திட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுவதால் சிறைத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பு புழல் சிறையில் அதிகளவில் இருக்கும்.மேலும், சட்டவிரோதமாக செல்போன் பேசுவதை தடுக்கும் வகையில் ஜாமர்கருவியும் பொருத்தப்பட்டிருக்கும்.
அதையும் மீறி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள், போதைவஸ்துகள், செல்போன்கள் கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காகசிறை கைதிகளிடம் தனிப்படை போலீஸார்அடிக்கடி சோதனை நடத்துவதுண்டு.
இந்நிலையில் தனிப்படையினர் புழல் சிறைக் கைதிகளின் அறைகளை சோதனைசெய்தனர். அப்போது, ஏ.ஆர்.டி. ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தியதோடு பொதுமக்களிடம் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட ஆல்வின் என்பவரது அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவருடைய அறையிலிருந்து கஞ்சா பொட்டலங்கள், சில போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் திருட்டு வழக்கில் கைதானசூர்யா என்பவரிடமிருந்து போதை மாத்திரைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். சிறைக் கைதிகள் சூர்யா, ஆல்வின் ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது, சிறைக்காவலர் திருமலை ராஜா நம்பி என்பவர் மூலம் இவர்களுக்கு கஞ்சா, போதை மாத்திரைகள் கிடைத்த தகவல் தெரியவந்தது. இதுகுறித்து சிறைத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி, சிறைக்காவலர் திருமலை ராஜா நம்பியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும்,கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.