

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நிலத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை, போதை கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் (47). அரிசிக்கடை வைத்துள்ளார். அதேபகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். இதனை செந்தில்குமார் தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது செந்தில்குமாரை அவர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டவே, அவரது குடும்பத்தை சேர்ந்த மோகன்ராஜ், ரத்தினாம்பாள், புஷ்பவதி ஆகியோர் ஓடி வந்து தடுத்துள்ளனர். அவர்களையும் மது அருந்திய கும்பல் அரிவாளால் வெட்டியது.
இதில் சம்பவ இடத்திலேயே செந்தில்குமார், மோகன்ராஜ், ரத்தினாம்பாள், புஷ்பவதி ஆகியோர் உயிரிழந்தனர். சத்தம் கேட்ட அப்பகுதியினர் அங்கு வந்து பார்த்தபோது, அனைவரும் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக பல்லடம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். பல்லடம் டிஎஸ்பி சவுமியா தலைமையிலான போலீஸார் சென்று, செந்தில்குமாரின் சடலத்தை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர்.
ஆனால் மற்ற 3 பேரின் சடலத்தை கிராம மக்கள் எடுக்கவிடாமல், கொலைகாரர்களை பிடிக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டதால், திருப்பூர் மாவட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “செந்தில்குமாரின் அரிசி கடையில் குட்டி (எ) வெங்கடேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்து வந்துள்ளார். அவர் தலைமையில் நேற்றிரவு ஒரு கும்பல் செந்தில்குமார் நிலத்தில் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேரை அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பியது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.