

சென்னை: சென்னை காசிமேடு, எஸ்.என்.செட்டி தெருவை சேர்ந்தவர் திருப்பதி (41). இவர் மீது 4 கொலை வழக்கு உட்பட 22 வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. திருமணமாகாத இவர் அவரது வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார். நீண்டநேரம் ஆகியும் அவரது வீட்டுக் கதவு திறக்கப்படாததால் சந்தேகம்அடைந்த அக்கம் பக்கத்தினர், வீடு சென்று பார்த்தபோது, திருப்பதி தூக்கில் தொங்கியது தெரிந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து காசிமேடு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்து போலீஸார் திருப்பதி சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பதி சில மாதங்களாகத் திருந்தி வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்புவாரணாசி சென்று திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர்தற்கொலை செய்துள்ளார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.