

சென்னை: விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயிலில் 12 கிலோ கஞ்சா கடத்திய 2 இளைஞர்களை ஆர்.பி.எஃப் மத்திய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சட்ட விரோதமாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக ஆர்.பி.எஃப். மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் மதுசூதன ரெட்டிக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதன் பேரில், போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நிலையத்தின் 7-வது நடைமேடைக்கு ஒரு விரைவு ரயில் வந்தது.
அதிலிருந்து வந்த 2 பேர் மீது ஆர்.பி.எஃப் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதித்தபோது, அதில் 6 பொட்டலங்கள் இருந்தன. இவற்றில் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2.80 லட்சம். இதையடுத்து, இருவரையும் பிடித்து விசாரித்த போது, இவர்கள் சேலம் மாவட்டம் மேல்காடு பகுதியைச் சேர்ந்த நந்த குமார் (27), சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கனாபுரத்தை சேர்ந்த யாதவன் (20) என்பதும், ரயிலில் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்து, சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரித்து வருகின்றனர்.