

செங்கல்பட்டு: குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் கடந்த 2008-ம் ஆண்டு, புதிதாக கட்டும் வீட்டுக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஒப்பந்ததாரர் வேலு. இவர் கடந்த 2008-ம் ஆண்டு குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில், புதிய வீடு கட்டுமான பணிக்கு தற்காலிக மின் இணைப்பு பெற வேண்டி அஸ்தினாபுரம் மின் உதவி பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளரான ஜான்சன் தேவகுமார் ஜேக்கப்பை அணுகினார்.
அப்போது, அவர், தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வேலு ஆலந்துார் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்படி, 2008-ம் ஆண்டு அக்.10-ம் தேதி இளநிலை பொறியாளரிடம் ரூ.5,000 பணத்தை வேலு கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் மடக்கி பிடித்தனர்.
இந்த வழக்கு செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஜான்சன் தேவகுமார் ஜேக்கப்புக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதிஜெய தீர்ப்பளித்தார்.