

சென்னை: மெரினா கடற்கரையில் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஏதாவது கோயிலில் இருந்து திருடப்பட்டது என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு, சட்ட விரோதமாக பல்வேறு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றன. சிலைகள் கடத்தப்படுவதைத் தடுக்க தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை மணல் பரப்பில் 2 பழங்கால சாமி சிலைகள் கிடந்தன. கருங்கல்லால் ஆன இந்த சிலைகள் பற்றி பட்டினப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீஸார் சம்பவ இடம் விரைந்து சிலைகளை மீட்டு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதேபோல் அண்மையில் மெரினா கடற்கரையில் கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் ஒரு அடி உயரமுள்ள கற்சிலை நேற்று கண்டெடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிலையை மெரினா போலீஸார் மயிலாப்பூர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த சிலையை ஏதாவது கோயிலில் இருந்து திருடி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர்.