

புதுடெல்லி: டெல்லியின் பஜன்புரா பகுதியைச் சேர்ந்த ஹர்பிரீத் கில் (36) அமேசான் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தனது உறவினர் கோவிந்த் சிங்குடன் (32) இருசக்கர வாகனத்தில் சென்றபோது 5 பேர் இவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், காயமடைந்த இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் ஹர்பிரீத் கில் தலையில் குண்டு பாய்ந்ததில் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது உறவினர் கோவிந்த் சிங் தலையில் குண்டு காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து டெல்லியின் வடகிழக்கு பகுதி காவல் துறை துணை ஆணையர் ஜாய் திர்கி கூறும்போது, “குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.