

மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் கைதான 2 இயக்குநர்கள் உட்பட 3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
மதுரையைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட 'நியோ மேக்ஸ்' நிறுவனம், கூடுதல் வட்டி தருவதாகக் கூறி பல்வேறு மாவட்டங்களில் ஏராளமானோரிடம் பல கோடி ரூபாய் முதலீடு வசூலித்து மோசடி செய்ததாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸார் வழக்குப் பதிந்து இயக்குநர்கள் சைமன்ராஜா, கபில் மற்றும் இதில் தொடர்புடைய எல்ஐசி முன்னாள் அதிகாரியான பத்மநாபன் உட்பட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் நிறுவன இயக்குநர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உட்பட பலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நிபந்தனைகள் விதிப்பு: இந்நிலையில் நியோ மேக்ஸ் இயக்குநர்கள் சைமன்ராஜா, கபில் மற்றும் பத்மநாபன் ஆகியோர் ஜாமீன் கோரி மதுரை பொருளாதாரக் குற்ற வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஜோதி விசாரித்தார்.
பின்னர் சைமன்ராஜா உட்பட 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி தினமும் காலை 10 மணிக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். தலா ரூ.1 லட்சம் பிணைத் தொகை செலுத்த வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் ஒருவர் கைது: இந்நிலையில், நியோ- மேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சிவகங்கை மாவட்டம் குமாரபட்டியைச் சேர்ந்த மலைச்சாமி(50) என்பவரை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.