கும்பகோணத்தில் பெண் செவிலியர் தற்கொலை; உயிரிழப்பில் சந்தேகம் என உறவினர்கள் மறியல்

கும்பகோணத்தில் பெண் செவிலியர் தற்கொலை; உயிரிழப்பில் சந்தேகம் என உறவினர்கள் மறியல்
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணத்தில் பெண் செவிலியர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது எனக் கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் வட்டம் திருமாந்துறை தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜன் மகள் வைஷ்ணவி (22). கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களாக செவிலியராக பணியாற்றி வந்தார். மருத்துவமனையின் மாடியில் தங்கியிருந்த இவர், உடனிருந்த மற்றொரு பெண் விடுப்பில் சென்று விட்டதால், தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவுப் பணியை முடித்துவிட்டு, நேற்று காலை அறைக்கு திரும்பிய வைஷ்ணவி, பின்னர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள், அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வைஷ்ணவி தூக்கிட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு போலீஸார் அங்கு சென்று, வைஷ்ணவியின் சடலத்தை கைப் பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வைஷ்ணவியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது எனக் கூறி, அவரது உறவினர்கள் விசிக மாநகர் மாவட்டச் செயலாளர் ச.கோ.ராஜ் குமார் தலைமையில் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கும்பகோணம் கிழக்கு போலீஸார், பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in