ஆம்பூர் அருகே சமூக விரோதிகளின் கூடரமாக மாறி வரும் மகளிர் சுகாதார வளாகம்

ஆம்பூர் அருகே சமூக விரோதிகளின் கூடரமாக மாறி வரும் மகளிர் சுகாதார வளாகம்
Updated on
2 min read

ஆம்பூர்: ஆம்பூர் அருகே சமூக விரோதிகளின் கூடரமாக மாறி வரும் மகளிர் சுகாதார வளாகத்தையும், அதையொட்டியுள்ள காரிய மேடையை மீட்டெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் துத்திப்பட்டு ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் அதே பகுதியில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகளிலும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களுக்காக பாலாற்றங்கரையையொட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகமும், அதன் அருகே நீத்தார் வழிபாடு செய்து, சடங்குகள் செய்ய காரியமேடையும் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சகல வசதிகளுடன் இருந்த மகளிர் சுகாதார வளாகமும், காரியமேடையும் உரிய பராமரிப்பு இல்லாததால் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டன.

இதனால், பொதுமக்கள் அவ் வழியாக செல்லவே அச்சப்படுகின்றனர் என பொதுமக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். இது குறித்து பொது மக்கள் தரப்பில் கூறும்போது, ‘‘துத்திப்பட்டு ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பாலாற்றங்கரையோரம் பெண்களுக்கான சுகாதார வளாகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்த சுகாதார வளாகத்தில் குளியலறை, கழிப்பறை, துணிகள் துவைக்க தண்ணீர் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. அதேபோல, உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட காரியமேடையிலும் உயிர் நீத்தாருக்கான வழிபாடுகள் செய்ய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. தண்ணீர் வசதிக்காக ஆழ்துளைக் கிணறும், அதற்கான மின் இணைப்பும் இருந்தது.

இதனால், பொதுமக்கள் அதிகம் பயன்பெற்று வந்தனர். ஆனால், உரிய பராமரிப்பு இல்லாததால் நாளடைவில் மகளிர் சுகாதார வளாகமும், காரியமேடையும் சிதிலமடைந்து மயான பகுதியைப் போல மாறிவிட்டது. காரிய மேடை சுற்றிலும் முட்புதர்கள் வளர்ந்து குறுங்காடுகள் போல உள்ளது. தண்ணீர் வசதி இல்லாததால் காரியமேடையில் சடங்குகள் செய்ய வரும் மக்கள் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தண்ணீர் எடுக்க அங்கிருந்து சில தொலைவு நடந்து சென்று குடங்களில் தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. அதேபோல, மகளிர் சுகாதார வளாகம் மூலம் துத்திப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் பயன்பெற்று வந்தனர். தற்போது, அங்கும் தண்ணீர் வசதி இல்லாததால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுகாதார வளாகத்தில் உள்ள கழிப்பறை கதவுகள் உடைக்கப்பட்டு, மின் விளக்குகள் உடைக்கப்பட்டுள்ளன. கழிப்பறைகளும் உடைந்த நிலையில் கிடக்கிறது. மக்கள் பயன்பாடு குறைந்து போனதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மகளிர் சுகாதார வளாகம் மாறிவிட்டது. பகல் நேரங்களில் சூதாட்டம் ஆடுவதும், இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக மகளிர் சுகாதார வளாகம் மாறிவிட்டது.

மது அருந்த வரும் மதுப்பிரியர்கள் காலி மது பாட்டில்களையும், உணவு கழிவுகளை அங்கேயே வீசிவிட்டு செல்வதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை சீரமைத்துத் தர வேண்டும். தண்ணீர் வசதியுடன் கூடிய காரியமேடையை புனரமைத்து தர வேண்டும் என துத்திப்பட்டு ஊராட்சி நிர்வாகம், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை’’ என்றனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘துத்திப்பட்டு பகுதியில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்தில் தண்ணீர் வசதிக்காக அங்கு புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும். மேலும், காரியமேடையை அவ்வப்போது தூய்மைப்படுத்தி தான் வருகிறோம். காரியமேடை பயன்பாட்டில் தான் உள்ளது. தண்ணீர் வசதி மற்றும் மின் விளக்கு வசதிகளையும் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in