

சென்னை: கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக ரவுடிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனது நண்பர்களுடன் கடந்த 23-ம் தேதி இரவு, எருக்கஞ்சேரி, மேற்கு இந்திரா நகர் பகுதியில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த 10 பேர் கும்பல் ரவி மற்றும் அவருடன் நின்று கொண்டிருந்த நபர்களை சூழ்ந்துகொண்டு கத்திமுனையில் மிரட்டி அவர்கள் அணிந்திருந்த 2.5 பவுன் தங்கச்சங்கிலி, பணம்ரூ.20 ஆயிரம் மற்றும் 5 செல்போன்களை பறித்துவிட்டுத் தப்பியது.
அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
4 பேருக்கு வலைவீச்சு: அதன் அடிப்படையில் வியாசர்பாடி அஜய் புத்தா (28), நம்மாழ்வார்பேட்டை பிரேம்குமார் (37), அதேபகுதி பரத் (22), சவுகார்பேட்டை யுவராஜ் (25), ஓட்டேரி நவீன் (18), வியாசர்பாடி நரேஷ்குமார் (30) ஆகிய 6 பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 பவுன் தங்கச்சங்கிலி, குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மற்றும்3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட அஜய் புத்தா மீது கொலை உட்பட 12 குற்ற வழக்குகளும், நரேஷ்குமார் மீது 3 குற்ற வழக்குகளும், பிரேம்குமார் மீது 6 குற்ற வழக்குகளும், யுவராஜ் மீது கொலை உட்பட 4 குற்ற வழக்குகளும், பரத் மீது கொலை முயற்சி உட்பட 2 குற்ற வழக்குகளும், நவீன் மீது வழிப்பறி உட்பட 4 குற்ற வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. கைதான 6 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.