

மேட்டுப்பாளையம்: கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் முகமது சபீக், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதில், ‘‘மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அறிவுடை நம்பி (49), திருப்பூர், மேட்டுப்பாளையம், வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகராட்சி அலுவலகங்களில் நகரமைப்புப் பிரிவில் அலுவலராக பணியாற்றியுள்ளார். நெல்லியாளம் நகராட்சியில் பணியாற்றி வந்த போது, ஒழுங்கீனம் காரணமாக கடந்த ஜனவரி மாதம் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவர் விஜய் அறிவுடை நம்பி என்ற பெயரில் இயங்கிவரும் முகநூல் பக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, எம்.பிக்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துகள் பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
அதேபோல, மேட்டுப்பாளையம் நகர வடக்கு திமுக துணைச் செயலாளர் மூர்த்தி அளித்த புகாரில், “அவதூறு பதிவு குறித்து அறிவுடை நம்பியிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்து தாக்கினார்” என கூறியிருந்தார்.
அதன் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸார் கொலை மிரட்டல், அவதூறு கருத்து பதிவிடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அறிவுடைநம்பியை நேற்றுமுன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.