

திருச்சி: திருச்சியில் 9.75 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தம்பதி உட்பட 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை பகுதி வழியாக இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள் அரசுப் பேருந்தில் சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக திருச்சி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதன் பேரில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அடங்கிய 7 பேர் கொண்டகுழுவினர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளையும் தீவிரமாக நோட்டமிட்டனர்.
அப்போது, திருச்சியில் இருந்து சென்னைசென்ற அரசு பேருந்து ஒன்றை கல்பாளையம் அருகே வழி மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், சந்தேகப்படும் படியாக பயணித்த இருவரை பிடித்து விசாரணை நடத்திய போது, முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது உடைமைகளை சோதனை செய்த போது, அதில் 7 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் திருச்சியைச் சேர்ந்த கணவன் - மனைவி என்பதும், சென்னையில் உள்ள தங்கநகை உரிமையாளருக்கு தங்கம் கடத்திச் செல்வதும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், அவர்களது வீடு மற்றும் திருச்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் வீடு ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டது.
இதில், மேலும் 2.5 கிலோ தங்கக் கட்டிகள், ரூ.6 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், திருச்சியைச் சேர்ந்த அந்த பிரமுகரும் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட 9.750 கிலோ தங்கக் கட்டிகளின் மொத்த மதிப்பு ரூ.5.89 கோடியாகும். கைது செய்யப்பட்ட தம்பதி உட்பட 3 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.