

சென்னை: தனியார் வங்கி ஊழியரை தாக்கி ரூ.1.87 லட்சத்தை பறிக்க முயன்ற ரவுடியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த நெற்குன்றத்தை சேர்ந்தவர் கிரி (51). இவர் பாரிமுனையில் உள்ள தனியார் வங்கியில் கடன் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார். கடந்த 23-ம் தேதி இரவு ராஜாஜி சாலை பர்மா பஜார் வழியாக இருசக்கர வாகனத்தில் கிரி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, 3 இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 6 பேர், கிரியை வழி மறித்து இரும்பு ராடால் தாக்கி, அவரிடம் இருந்த வசூல் பணம் ரூ.1.87 லட்சத்தை பறிக்க முயன்றனர். ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக அவர்களிடம் இருந்து தப்பினார்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு: இது தொடர்பாக வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் கிரி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது காசிமேட்டை சேர்ந்த பிரபல ரவுடி விமல்குமார் (23) என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, காசிமேடு பகுதியில் பதுங்கியிருந்த விமல் குமாரை வடக்கு கடற்கரை போலீஸார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.